ஒரு மக்கள் பிரதிநிதியின் மாற்றுப்பார்வை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

விரல்மொழியர் இதழின் ஆசிரியர் திரு. பாலகணேசன் சொல்லித்தான் நமக்கு முத்துராஜா அறிமுகமானார். திரு. முத்துராஜா அவர்கள் நம்மிடம், தனக்கு பார்வையை அதிகரிப்பதற்காக செய்யப்பட்ட ஓர் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட திரவத்தை திரும்ப வெளியே எடுத்திருக்க வேண்டும். ஆனால், தனது நிதி சூழல் காரணமாக அதற்கான முயற்சியைத் தள்ளிப்போட்டு வந்ததாகவும், அது தனது கேட்கும் திறனை மெல்ல பாதித்து வருவதைத் தற்போது உணர்வதாக நம்மிடம் கூறினார். மேலும், இந்த அறுவை சிகிச்சைக்கு தற்போது 70 ஆயிரத்திற்கும் மேலே செலவாகும் என்பதையும் தெரிவித்தார்.

அவரின் நிதிச்சூழலை கருத்தில்கொண்டு, அவருக்கு உதவுவது என நாம் முடிவு செய்தோம். இதற்காக நாம் அமெரிக்காவில் வசித்துவரும் தன்னார்வலர் ஆன திருமதி ஸ்ரீமதி அவர்களிடம் உதவி கேட்டோம். அவரும் தனக்கு தெரிந்த மருத்துவர் வழியாக, மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் முத்து ராஜாவை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கினார்.

சித்ரா
சித்ரா

திரு. முத்துராஜா அவர்களுக்கு அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அது உடனடியாக மேற்கொள்ளப்படாத பட்சத்தில் அவருக்கு காதுகளில் ஏற்பட்டுள்ள 40 விழுக்காடு பாதிப்பு மேலும் அதிகரித்து, அவர் முழு கேட்கும் திறனையும் இழக்க வாய்ப்பு இருப்பதாக நமக்குத் தெரிய வந்தது. ஆனால், இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்ள சுமார் 75 ஆயிரத்துக்கும் மேல் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டது.

சிறிது காலம் பொறுத்திருந்தால், ஒருவேளை தொகையை நம்மால் திரட்டிவிட முடியும்தான். ஆனால், மருத்துவரின் அறிக்கையின்படி அவருக்கு உடனடியாக அறுவைசிகிச்சை மேற்கொண்டாக வேண்டும். காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் அவர் கேட்கும் திறனை இழந்து கொண்டே இருப்பார் என்பதை தீவிரமாகப் பரிசீலித்துகொண்டிருந்தோம்.

முழுத் தொகையையும் எப்படி திரட்டுவது? அதுவும் இவ்வளவு வேகமாக எப்படி திரட்டி விட முடியும்? அடுக்கடுக்கான கேள்விகள் எம்மைக் குடைந்துகொண்டிருந்தபோது, நினைவில் நிழலாடியவர்தான் மரியாதைக்குரிய திருப்பரங்குன்றம் எம்எல்ஏ திரு. சரவணன் அவர்கள்.

பார்வையற்றவர், அல்லது வேறெந்த விளிம்புநிலை மனிதர்கள் என்றாலே, அவர்களுக்கு உணவு தரலாம், அல்லது உடை எடுத்துத் தரலாம், அதுவே போதுமானது என்று திருப்தியடைந்து கொள்கிற பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையிலிருந்து வேறுபட்டு, தனக்கென்ற மாற்றுப்பார்வையோடு மாற்றுத்திறனாளிகளை அணுகுபவர்தான் மருத்துவர் சரவணன். மாற்றுத்திறனாளிகளும் சராசரியான மனிதர்களே, அவர்களுக்கும் ஒரு கனவு, குறிக்கோள் இருக்கும், அது நிறைவேறுவதற்கு நாம் கைகொடுப்பதுதான் சரியானதாக இருக்கும் என ஆக்கபூர்வமாகச் சிந்திப்பவர். அதாவது, மீன் வாங்கித் தரும் பலருக்கு நடுவில், மீன் பிடிக்கக் கற்றுத்தரும் மனப்பான்மை கொண்ட மக்கள் பிரதிநிதி.

பூரணசுந்தரியுடன் டாக்டர் சரவணன்
பூரணசுந்தரியுடன் டாக்டர் சரவணன்

அதனால்தான், குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற பூரணசுந்தரியை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, திரு. சரவணன் மட்டும்தான் சுந்தரி தற்போதுதான் தனது முக்கியமான பயணத்தைத் தொடங்கியிருப்பதாக உணர்ந்தார். மக்களுக்குப் பணிசெய்யக் கிடைத்திருக்கும் இந்த அறிய வாய்ப்பில் அவரது பார்வையின்மை எவ்வாறெல்லாம் அவருக்குத் தடையாக இருக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே யோசித்தது மட்டுமல்ல, அதற்குச் சரியான எதிரீடாகத் தொழில்நுட்பம்தான் இருக்க முடியும் என்பதையும் மிகச் சரியாக கணித்தார்.

விலை அதிகமானதே என்றாலும், அதன் முக்கியப் பயன்பாடு கருதி, சுமார் மூன்றரை லட்சம் மதிப்புடைய ஆர்காம் கருவியை சுந்தரிக்கு வாங்கித் தந்தார். நவீனமுறையில் பிரெயிலை மிக எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம், அவருக்கு 25 ஆயிரம் மதிப்புடைய ஆர்பிட் ரீடர் என்ற கருவியையும் வாங்கிக்கொடுத்தார். சுந்தரியோடு நிற்கவில்லை திரு. சரவணன். தனது அறக்கட்டளை வாயிலாக, பார்வையற்றவர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சியும் வழங்கத் திட்டமிட்டிருக்கிறார். இத்தகைய மாற்றுப்பார்வை கொண்ட திரு. சரவணன் அவர்களிடமே நமது பிரச்சனையைச் சொல்லலாம் என முடிவுசெய்து, உடனடியாக அவரைத் தொடர்புகொண்டோம். நமது கோரிக்கையை சிறிதும் தாமதமின்றி ஏற்ற அவர், தனது மருத்துவமனையிலேயே இலவசமாக முத்துராஜாவுக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

முத்துராஜா
முத்துராஜா

தான் மருத்துவமனையில் இருந்த ஐந்து நாட்களும், தன்னை அனைவரும் மிக கண்ணியத்துடனும், கரிசனமாகவும் பார்த்துக்கொள்வதை அவ்வப்போது சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார் முத்துராஜா. இப்போது நன்கு குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். எண்ணத்தில் சக மனிதப்பற்றும், சொல்லில் கனிவும் துணைகொண்டு, செயலில் புதுமையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் அங்கத்தினர் அனைவரும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வாழ்க, அவரின் மனிதப்பற்று, வளர்க சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த மாற்றுப்பார்வை.

பகிர

2 thoughts on “ஒரு மக்கள் பிரதிநிதியின் மாற்றுப்பார்வை

  1. அவசரம் கருதி உதவிய மருத்துவருக்கும் அவசியம் கருதி வெளிச்சப்படுத்திய சவால் முரசு இதழுக்கும் வாழ்த்துக்கள்

  2. அவசரம் கருதி உதவிய மருத்துவருக்கும் அவசியம் கருதி வெளிச்சப்படுத்திய சவால் முரசு இதழுக்கும் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *