ஆழ்ந்த இரங்கல்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு. முத்துசாமி அவர்கள், ஓர் அறிய இயலாத விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனளிக்காமல் இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தி மனதை உலுக்குகிறது. நேற்றிருந்தார் இன்றி்லை என்கிற ஆதங்கமா என்றால் அதுதான் இல்லை. காரணம் அவர் எல்லோரையும் போல இருப்பதற்காக இந்தப் பிறவி எடுக்கவில்லை என்பதை, தற்போதைய கரோனா ஊரடங்கு நாட்கள் நமக்கு உணர்த்தின. எப்போதும் சென்னையின் ஏதோ ஒரு பகுதியில் தன்னைக் களப்பணியில் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொண்டிருந்தவர் தலைவர் முத்துசாமி.

முத்துசாமி
முத்துசாமி

துடிப்பும் தோரனையுமாய், அவர் நடமாடிய நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன. கடந்த சனிக்கிழமை மாலை, அதாவது அவர் விபத்தில் சிக்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்புதான், பூவிருந்தவல்லி பேருந்து பணிமனையில் இலவச பயண அட்டை தொடர்பாக வாதம் செய்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது, அவர் தனது உரிமை முழக்கத்தை இறுதி மூச்சுவரை கைவிடவில்லை என்பது தெளிவாகிறது.

அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டதுமே, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து பார்வையற்றவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை நோக்கித் திரளத் தொடங்கிவிட்டார்கள். இது, தான் சார்ந்த பார்வையற்ற சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த மாறாப்பற்றிற்குக் கட்டியம் கூறுகிறது.

அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதை விரைவாகக் கண்டுபிடித்து, காவல்த்துறை அவருக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டுமென ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கோரிக்கை வைக்கிறது. மேலும், அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு எமது சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *