செய்தி உலா

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

31 ஆகஸ்ட், 2020

வரலட்சுமி, சுரேஷ்    நாயகி வரலட்சுமி காவல்த்துறை அதிகாரியாக நடித்து இந்த மாத (ஆகஸ்ட்) தொடக்கத்தில் நெட் ஃப்லிக்ஸில் வெளியான திரைப்படம் டேனி.  பள்ளியில் படிக்கும் ஒரு பார்வையற்ற குழந்தையின் இறப்பு குறித்த புலனாய்வே படத்தின் மூலக்கதை என்பதால், இந்தப் படத்தின் பல காட்சிகள் தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படமாக்கப்பட்டன. படத்தில் அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சுரேஸ்குமார் மற்றும் இரவுக்காவலர் ராஜ்குமார் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார்கள். டைட்டில் கார்டிலும் “தஞ்சை பார்வையற்றோர் பள்ளிக்கு நன்றி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தால், அது பள்ளிக்கு விளம்பரத்தையும், பொது மக்களிடம் ஒரு விழிப்புணர்வையும் உண்டாக்கியிருக்கும் என்கிறார்கள் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள்.

‘கப்சிப் டேனி’

மக்களின் மொத்த சேமிப்பையும் கரைத்து, அவர்களைத் தொடங்கிய இடத்திற்கே துரத்தியிருக்கிறது கரோனா ஊரடங்கு. இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பார்வையற்ற தம்பதியினர் தாங்கள் பத்தி வியாபாரம் செய்து சேர்த்து வைத்திருந்த ரூபாய் 25000 மதிப்பிலான நோட்டுகள் அனைத்தும் செல்லாதவை என்று அறிந்து அதிர்ச்சியானார்கள். செய்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. கதிர்வேலை எட்டவே, தன்னுடைய சொந்த சேமிப்பு ரூ. 25000 தந்து ஆற்றுப்படுத்தியிருக்கிறார் கலெக்டர்.

‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!’

இந்து தமிழ்த்திசை மின்னிதழ்

தலைமை நீதிபதி விலையுய்யர்ந்த பைக்கில் அமர்ந்து சவாரி செய்வது போன்ற புகைப்படத்தை இணைத்து, உச்ச நீதிமன்ற செயல்பாட்டைத் தன் ட்விட்டால் விமர்சித்திருந்தார் பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன். ஒருபுறம் இந்தச்செய்தி நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்திக்கொண்டிருக்க, தனது கால் துண்டிக்கப்பட காரணமான விபத்து தொடர்பான வழக்கில், தனக்கான இழப்பீட்டை அதிகரித்து வழங்கும்படி, மதுரை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் தஞ்சையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜா.

வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞரிடம் ஒப்படைக்க, கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சையிலிருந்து சைக்கிளில் புறப்பட்ட ராஜா, மாலை 5 மணிக்கு மதுரையை அடைந்திருக்கிறார். அடுத்தநாள் காலை மதுரையிலிருந்து புறப்பட்ட அவர், அன்று இரவே தஞ்சை வந்து சேர்ந்திருக்கிறார். ராஜா தன் ஒற்றைக்காலால் நடத்திய உண்மையான நீதிகேட்பு நெடும்பயணத்தைவியந்து பாராட்டுகிறார்கள் மக்கள்.

‘நின்ற இடத்தில் பைக், நீதி கேட்டு நெடும்பயணமாய் சைக்கிள்’

  

சரவணன் , பூரணசுந்தரி

 திருப்பரங்குன்றம் எம்எல்ஏ மருத்துவர் திரு.     சரவணன், மதுரை மாற்றுத்திறனாளிகளோடு எப்போதும் தொடர்பில் இருப்பவர். குடிமைப்பணிகள் தேர்வில்வெற்றி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளியான பூரணசுந்தரிக்கு, அவர் பார்வைக்கு உதவும் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான ஆர்க்காம் (orcam) என்ற கருவியை வாங்கித் தந்து அசத்தியுள்ளார். மேலும், அவர் எளிமையான முறையில்  பிரெயிலை பயன்படுத்த ஏதுவாக, ஆர்பிட் ரீடர் (orbit reader) என்ற நவீன தொழில்நுட்பக் கருவியையும் வழங்கியுள்ளார். மதுரையின் ஐயூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி கார்த்திகா கல்லூரியால் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளில் தடையின்றிப் பங்கேற்க உதவும் பொருட்டு, அவருக்கும் அதிநவீன திறன்பேசியைத் தனது சூரியா அறக்கட்டளை மூலம் வழங்கியிருக்கிறார் சரவணன். அத்தோடு, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தொழில்நுட்பக் கருவிகள் பயன்பாடு குறித்து, தனது அறக்கட்டளையின் சார்பில் வகுப்புகள் நடத்தப்படவிருப்பதாகவும் சொல்கிறார்.

‘சரவணன் இருக்க பயமேன்’

 * * *

சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர:

சவால்முரசு முகநூல் 

சவால்முரசு வலையொளி 

சவால்முரசு கீச்சகம்

சவால்முரசு இன்ஸ்டாகிராம்

 வாட்ஸ் ஆப்: 9787673244

டெலகிராம்: 9994636936

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆக்கங்களை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *