31 ஜூலை, 2020
பொதுத்தேர்வு முடிவுகளைத் தாங்கி வந்த கடந்த ஜூலை மாதமானது,, ஓவியா, காவியா என்ற இரண்டு திறமையான எதிர்கால நம்பிக்கைகளை பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு அறிமுகம் செய்து சென்றிருக்கிறது. முன்னவர், பதிலி எழுத்தர் துணையின்றி மடிக்கணினியைப் பயன்படுத்தி சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தானே எழுதி, 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தவர். பின்னவர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 571 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். இருவரின் பேட்டிகளையும் வெளியிட்டு, பொதுச்சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற அனைத்து ஊடகங்களுக்கும் நன்றிகள்.
இரண்டு மாணவிகளின் பேட்டிகளில் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையிலும் தவிர்க்க இயலாத பேசுபொருளாகியிருக்கிறது மடிக்கணினி. ஒருவர் மூன்றாம் வகுப்பிலிருந்தே மடிக்கணினி பயின்று, ஏழாம் வகுப்பு முதல் தன் தேர்வுகளை மடிக்கணினியில் எழுதி வருவதாகச் சொல்கிறார். இன்னொருவர், தான் இரண்டு ஆண்டுகளாக அரசால் வழங்கப்படும் மடிக்கணினிக்காக காத்திருப்பதாகவும், இப்போதாவது தனக்கு அது வழங்கப்பட்டால், தன்னுடைய உயர்கல்விக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். ஒருவருக்குப் பிரெயிலைவிடக் கணினி அத்துபடி; இன்னொருவருக்கு பிரெயில்தான் எல்லாமுமாய் இருக்கிறது.
ஒரே நிலத்தைச் சேர்ந்த, ஒரே குறைபாடுடைய இரண்டு மாணவிகளுக்கு வழங்கப்படுகிற கல்வியில் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்பதைப் போகிற போக்கில் ஒரு மடிக்கணினி துணைகொண்டு குறிப்பால் உணர்த்தியிருக்கிறது காலம். புதிய கல்விக்கொள்கை என்றும், மும்மொழி செம்மொழி என்றும் அடித்துக்கொண்டிருக்கும் முன்னால் இந்நாள் அரசுகளைப் பொறுப்பாக்குவது இருக்கட்டும். நாம் இதுவரை என்ன செய்துவிட்டோம்?
சிறப்புக் கல்வியே சிறந்ததென்று சிலிர்த்துக்கொள்வோரும், உள்ளடங்கிய கல்வியே உயர்வானதென்று உருகிக்கொண்டிருப்போரும் என்றேனும் ஒருநாள், ஒன்றாக உட்கார்ந்து உரையாடி இருக்கிறோமா? அவரவர் உயர்த்திப் பிடிக்கிற முறையின் நல்லவை அல்லவைகளைக் கூட்டு மனப்பான்மையுடன் ஆராய்ந்து, வலிமையான கருத்துருவாக்கத்தை அடிப்படையாகக்கொண்ட கல்விமுறையை வடிவமைக்க முயன்றோமா?
அத்தகைய உரையாடலைக் காலம் நம்மிடம் வலியுறுத்தி நிற்கிறது. இனிமேலும் தாமதித்தால், எதிர்காலப் பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்தில் படித்தவர்கள் இருப்பார்கள், பட்டதாரிகள் நிறைவார்கள், ஆனால், அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது, எதார்த்த உலகியல் அறிவும் இருக்காது. இப்போது சொல்லுங்கள்! என்ன செய்யலாம்?
Online GNE கூட்டம் ஒன்றினை நடத்தி கருத்துக்களை ஒன்றிணைத்து வரைவு தயார் செய்து நமது துறை மற்றும் அரசு இருக்கு தரலாம்