31 ஆகஸ்ட், 2020
|
விரல்மொழியர் |
தமிழ்த் திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர் என்பது பற்றிய, பார்வை மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் தமிழின் முதல் மின்னிதழான “விரல்மொழியர்” மின்னிதழில் வெளியான இந்தத் தொடர் பத்துப் பகுதிகளுடன் நிறைவு செய்யப்பட்டது. இந்தத் தொடரில் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களும் பிளாக் எனும் இந்தித் திரைப்படமும் இடம்பெற்றது. சரியாகப் பத்து பகுதிகளை முடித்துவிட்டு, தொடரில் இடம்பெற்ற கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களையும் இணைத்து, அதை ஒரு புத்தகமாகக் கொண்டுவரலாம் என இன்னமும் காத்திருக்கிறேன். இச்சமயத்தில் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவைத் தோழர்கள், இந்தியத் திரைப்படங்களில் பார்வையற்றோர் குறித்த சித்தரிப்பு என்ற பொருண்மையில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்ததோடு, அந்தக் கருத்தரங்கில் தமிழ்த் திரைப்படங்கள் குறித்துப் பேசும்படி என்னை அழைத்தனர். மிகுந்த தயக்கத்துடனே உரையாற்றுவதற்கு ஒப்புக்கொண்டேன்.
|
அனில் அனேஜா |
கருத்தரங்கில் இந்தித் திரைப்படங்கள் குறித்து அகில இந்தியப் பார்வையற்றோர் சம்மேளனத்தின் துணைச்செயலர் திரு. அனில் அனேஜா பேசினார். அந்தப் பேச்சில், பார்வையற்றோர் வாழ்வியல் குறித்துச் சித்தரித்த பல இந்தி திரைப்படங்களைக் கால வரிசை அடிப்படையில் பட்டியலிட்டு, சமகால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு விவரித்தார். அப்போது அந்தக் கருத்தரங்கில் நான் பேசியதை ஒரு கட்டுரையாகவும் எழுதித் தருமாறு சவால்முரசு மின்னிதழின் ஆசிரியரான நண்பர் சரவணமணிகண்டன் கேட்டுக்கொண்டார். கூடவே திரைவெளிச்சம் என்கிற தொடர் கட்டுரைகளைத் தமிழ்த் திரைப்படங்களிலிருந்து பிற மொழித் திரைப்படங்களுக்கு நகர்த்திச் செல்லலாம் என்ற ஆவலையும் தூண்டினார். தொடரின் தொடக்கமாகக் கருத்தரங்கில் இடம்பெற்ற என்னுடைய உரையையே ஆவணமாக்கி, இதோ! இரண்டாம் பாகத்தைத் தொடங்குகிறேன்
நம்பிக்கையை ஏற்படுத்துவதில் திரைப்படங்களின் பங்கு:
|
பட மூலம் விக்கிப்பீடியா |
மாயத் தோற்றத்தைத் திரையில் காட்டுபவை திரைப்படங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். திரையில் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் பார்வையாளர்களின் சிந்தனையில் உண்மையான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையே திரைப்படங்கள் என்பது பலரும் அறியாதது. உதாரணமாக பாம்புகள் தமது இரையை விழுங்குவதை டிஸ்கவரி தொலைக்காட்சிகளில் நேரடியாகப் பார்க்கிறோம். அதாவது பாம்புகளால் உறிஞ்சும் திறனற்றவை; விழுங்கக்கூடியவை. ஆனால் திரைப்படங்களில் பாம்புகள் பாலை உறிஞ்சிக் குடிப்பது போலவும் நஞ்சை உறிஞ்சி நீக்குவது போலவும் காட்டுகின்றனர். டிஸ்கவரி தொலைக்காட்சியைப் பார்த்தாலும் பாம்புப் புற்றில் பாலூற்றும் நம்பிக்கை மேலெழும்பி நிலைத்து நிற்கிறது. ஆகவே தெரிந்த கருத்துடன் நம்பிக்கையைத் தொடர்புபடுத்தி ஆராயும் திறனை மங்கச் செய்யும் வல்லமை கொண்டவை திரைப்படங்களின் திரைக்கதையும் காட்சியமைப்புகளும் ஆகும். அவ்வகையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றியும் திரைப்படங்கள் ஒருவிதமான, உண்மைக்கு மாறான நம்பிக்கையைப் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ள உண்மைக்கு மாறான நம்பிக்கைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1) பார்வைக் குறைபாட்டுடன் வாழ இயலாது:
|
பட மூலம் விக்கிப்பீடியா |
பெருவெற்றி பெற்ற “காசி” திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியான நாயகனுக்கு எப்போது பார்வை கிடைக்கும் என்ற போக்கிலேயே கதை அமைக்கப்பட்டிருக்கும். அதாவது பார்வை கிடைத்த பிறகே நாயகன் வேலைக்குச் செல்ல முடியும் எனவும் அதுவரை பிச்சை எடுத்துதான் வாழ வேண்டும் எனவும் காட்டப்பட்டிருக்கும். அதே போல “நான் கடவுள்” திரைப்படத்தில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் பிச்சைக்காரர்களாக இருப்பர். பார்வை மாற்றுத்திறனாளியான நாயகி மட்டுமே கருணைக் கொலை போன்று கொல்லப்படுவார். அதாவது ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக வாழ்வது இயலாது என்று, கடவுளே மரணத்தை வரமாக வழங்குகிறார். இப்படியாக பார்வைத் திறன் இன்றி வாழ இயலாது என்ற தவறான நம்பிக்கையைத் திரைப்படங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக் குழந்தையை, மாணவரைப் பார்ப்பவர்கள் அவர்களால் வாழ முடியாது என்ற முன் தீர்மானத்துடன் ஏதேனும் உண்ணும் பொருளை வழங்குவதை மட்டுமே தமது பொறுப்பாகக் கருதுகின்றனர்.
2) இசைத் திறனைத் தவிர வேறெந்தத் திறனும் அற்றவர்கள்:
|
பட மூலம் விக்கிப்பீடியா |
ராஜ பார்வை தொடங்கி காசி, குக்கூ வரையிலான திரைப்படங்களில் இனிமையான பாடல்கள் மூலமாக பார்வை மாற்றுத்திறனாளிகளை இசைத் துறைக்குள் முடக்குகின்றனர். ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் பண்பலை வானொலியில் நெறியாளராகவும் அதே கண்கள் திரைப்படத்தில் சமையல் கலைஞராகவும் பார்வை மாற்றுத்திறனாளிகள் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். ஏனைய திரைப்படங்களில் ஒன்று இசைத் துறையைச் சேர்ந்தவர்களாக அல்லது வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களாக அமைக்கப்பட்டிருக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய தொழில்நுட்பங்கள் பற்றிய தொலைநோக்குடன் சிந்தித்து திரைக்கதை அமைக்கும் படைப்பாளிகளின் பார்வையில் நிகழ்காலத்திலேயே பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றிக் கவனம் பெறுவதேயில்லை. இதன் காரணமாக எவ்வளவு திருப்திகரமாக நிரூபித்தாலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுக்கின்றனர். முக்கிய உதாரணமாக கணிசமான பார்வை மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக வெற்றிகரமாக பணிபுரிந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்குவதில்லை.
3) பார்வை மாற்றுத்திறனாளி என்பவர் முழுமையாகப் பார்வையற்றவர்:
|
பட மூலம் விக்கிப்பீடியா |
குற்றமே தண்டனை திரைப்படத்தில் நாயகன், குகைப் பார்வை எனப்படும் குழாய் வழியாகப் பார்ப்பது போன்ற பார்வைக் குறைபாடு கொண்டவர். இந்தத் திரைப்படம் தவிர்த்து மற்ற அனைத்து திரைப்படங்களிலும் முதன்மைக் கதாபாத்திரம் மற்றும் துணைக் கதாப்பாத்திரத்தில் வரும் பார்வை மாற்றுத்திறனாளிகள் எவரும் முழுமையாகப் பார்வை இல்லாதவர்களாகவே இருப்பர். குறைப்பார்வை, நிறக்குருடு போன்ற பிற பார்வைக் குறைபாடுகளைக் கொண்டவர்களை பார்வை மாற்றுத்திறனாளிகளாகத் திரைப்படங்களில் காட்டுவதில்லை. ஒரு கை அல்லது ஒரு கால் குறைபாடு இருந்தாலும் மாற்றுத்திறனாளியாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம், பார்வை மாற்றுத்திறனாளி என்றால் முழுப் பார்வையற்றவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதன் காரணமாக முழுக் குறைபாடு இல்லாமல், கணிசமான பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்று கோரும்போது பார்வை இருந்தும் பார்வை மாற்றுத்திறனாளி என ஏமாற்றுவதாகத் தவறாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர்.
மற்ற மாற்றுத்திறனாளிகளை முதன்மை, துணை, நகைச்சுவைக் கதாபாத்திரங்களை உருவாக்கும் அளவிற்கு ஒப்பீட்டளவில் பார்வை மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்கள் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெறுவது இல்லை. எதார்த்த வாழ்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் இயல்பாகவே நடமாடுகின்றனர். ஆனால் வெறும் கதாபாத்திரங்களாக நடமாடச் செய்வதில் கூட படைப்பாளிகள் மிகுந்த தயக்கத்துடன் சிந்திக்கின்றனர். அதையும் மீறி பார்வை மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டால் விளம்பரப்படுத்தும் பேட்டிகளுக்கு மெனக்கெடும் முயற்சிகளில் கணிசமான அளவு முயற்சி கூட கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் காட்டுவதில்லை.
|
இயக்குநர் மிஷ்கின் |
மிகச் சமீபத்தில் வெளியான “சைக்கோ” திரைப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியாக வரும் நாயகனும் முழுமையாகப் பார்வையற்றவர் மற்றும் இசைக் கலைஞராக இருப்பார். இதில் மட்டுமின்றி மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு ஆகிய திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களாக பார்வை மாற்றுத்திறனாளிகள் இருப்பர். இவை மிஷ்கின் இயக்கிய மற்ற திரைப்படங்களில் கதாபாத்திரம் இல்லாமலே பார்வை மாற்றுத்திறனாளிகள் சில காட்சிகளில் வருவர். உதாரணமாக முகமூடி திரைப்படத்தில் மதுக்கூடத்தில் நடனமாடுவதாக வரும் பாடலில் திருநங்கைகள், பார்வை மாற்றுத்திறனாளிகள் சிலர் மது அருந்துவது காட்டப்படும். அதாவது சைக்கோ திரைப்படத்தில் மட்டுமே பார்வையின்மை வெளிப்படையாக காட்டப்பட்டிருக்கும். மற்ற திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிடாமலேயே அந்தக் கதாபாத்திரங்கள் காட்டப்படும்.
|
பிசாசு திரைப்படத்தில் பாடிக்கொண்டிருக்கும் பார்வையற்ற சிறுமி |
பார்வை மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்திக் கதை எழுதுவது, காட்சியமைப்பது என அனைத்தும் அந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் ஐந்தாறு பாடல்களில், பாடல் வரிகளில் மட்டுமே அதிகப்பட்ச கவனம் செலுத்தப்படுகிறது. வணிக வெற்றி இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. இதில் பார்வை மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரம் உருவாக்குவதை பெரும் சாதனையாகக் கூறிக்கொள்வதும் உண்டு. ஆனால் மிஷ்கின் தனது திரைப்படங்களில் கதாபாத்திரங்களை உருவாக்காமலேயே பார்வை மாற்றுத்திறனாளிகளை ஆங்காங்கே இடம்பெறச் செய்கிறார். நாம் செல்கின்ற இடங்களில் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர் என்பதை மறைமுகமாக உணர்த்திக்கொண்டே வருகிறார். இதனால் பார்வை மாற்றுத்திறனாளிகளை அரிய மனிதர்களாக இல்லாமல், இயல்பான மனிதர்களாகப் பார்க்கும் மனப்பான்மை உருவாகலாம்.
ஆனால் இன்னமும் மிஷ்கின் இயக்கிய திரைப்படங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஆசிரியர்களாக, வங்கி அலுவலர்களாக, அரசு அலுவலர்களாகக் காட்டவில்லை. இருந்தாலும் எவ்வித நெருடலும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகையான கருணையை எதிர்பார்க்காமல் பார்வை மாற்றுத்திறனாளிகளைத் தொடர்ந்து திரையில் காட்டுகிறார். அவர் ஒருவர் மட்டுமே மற்ற மனிதர்களைப் போன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் இந்தச் சமூகத்தில் வாழ்ந்துவருவதை ஏற்றுக்கொள்கிறார் என்று தோன்றுகிறது. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல மிகையான கற்பனையின்றி ஒரு ஓரத்தில் ஆங்காங்கே பார்வை மாற்றுத்திறனாளிகளைக் காட்டிவரும் இயக்குநர் மிஷ்கின் அவர்களின் அணுகுமுறை வரவேற்கத்தக்கதாகும்.
16.8.2020 அன்று நடத்தப்பட்ட இணையவழிக் கருத்தரங்கில் தமிழ்த் திரைப்படங்களில் பார்வை மாற்றுத்திறனாளிக் கதாபாத்திரங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பது பற்றிய எனது உரை இவ்வாறாக அமைந்தது. முன்னதாக இந்நிகழ்வில் அலிகார் பல்கலைக்கழக விரிவுரையாளர் ப. பூபதி வரவேற்புரை வழங்க, முனைவர் உ. மகேந்திரன் நன்றியுரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வினைத் தொகுத்து வழங்கிய திருவள்ளுவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் கு. முருகானந்தன், பேராசிரியர் அனில் அனுஜா அவர்களின் ஆங்கில உரையை மிக அழகான தமிழில் மொழியாக்கம் செய்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்தத் தொடர் 2.0ஆக மீண்டும் தொடங்குவதற்குத் தூண்டுதலாக இருந்த, பேராசிரியர் அனில் அனேஜா அவர்கள் குறிப்பிட்ட அந்தத் திரைப்படம் பற்றிய பார்வை அடுத்த பாகத்தில் இடம்பெறும்.
பின்குறிப்பு:
இத்தொடரில் இன்னமும் இடம்பெற வேண்டிய திரைப்படங்கள் குறித்து நண்பர்கள் சுட்டிக்காட்டினால் இந்தத் தொடர் மேலும் செழுமை பெறும்.
கட்டுரையாளர் குறிப்பு:
திரு. கா. செல்வம் அவர்கள், ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தொடர்புகொள்ள: teacherselvam@gmail.com
* * *
சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர
வாட்ஸ் ஆப்: 9787673244
டெலகிராம்:9994636936
மிகச்சிறப்பான கட்டுரை அடுத்த விருந்துக்கு ஆயத்தம் ஆகி விட்டோம் சார் மிக்க நன்றி வாழ்த்துக்கள்