நம்புராஜன் |
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான 520 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களில் 497 பேரும், 592 செவித்திறன் குறையுடைய மாணவர்களில் 486 மாணவர்களும் வெற்றிபெற்றனர். 983 உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளில் 860 பேர் மற்றும் 740 இதர மாற்றுத்திறனாளிகளில் 664 பேரும் தேர்ச்சி பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 பார்வையற்றவர்களும், சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 129 செவித்திறன் குறையுடைய மாணவர்களும் தேர்வெழுதியுள்ளனர்.
அரசு சிறப்புப் பள்ளிகளைப்பொருத்தவரை,பூவிருந்தவல்லி, திருச்சிமற்றும் தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளிகளில் மாணவர்கள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல்,தஞ்சை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளியில் தேர்வெழுதிய 12 மாணவர்களும், தர்மபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசுசிறப்புப் பள்ளியில் 10ல் 9 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாற்றுத்திறனாளிகளின் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து நேற்று அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,
நேற்று வெளியிடப்பட்ட +2 முடிவுகளின்படி, தேர்வு எழுதியவர்களில் பார்வைத்திறன்-95.58%, செவித்திறன்-82.09%, உடல்ஊனமுற்றோர்- 89.59 மாணாக்கர்களும் ஏனைய வகை மாற்றுத்திறனாளர்-87.49% என்ற விகிதத்தில் மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்களையும், பாடுபட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளின் கல்வி மேம்பட அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ø அரசு இணையதளத்தில் அனைத்துப் பாடங்களையும் யுனிக்கோட் முறையில் டெக்ஸ்டாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் மூலம் பார்வைத்திறன் மாணாக்கர்கள் எளிதாகவும் முழுமையாகவும் கற்க வழிவகை செய்ய வேண்டும்.
Ø தமிழக அரசு வழங்கும் மடிக்கணினியுடன், டெக்ஸ்டில் இருந்து பிரெயில் முறைக்கு மாற்றித்தரும் ‘ஆர்பிட் ரீடர்’ கருவி போன்றவை பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டும். பிரெயில் புத்தகங்களை காலதாதமின்றி வழங்க வேண்டும்.
Ø தற்போது இல்லாத கணிதம் உள்ளிட்ட பாடங்களை, தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பார்வைத்திறன் மாணாக்கர்கள் படிக்க முடியும் என்பதால், அப்படிப்பட்ட பாடங்களையும் புகுத்த வேண்டும்.
Ø பொதுப்பள்ளிகளில் பார்வைத்திறன், செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான உரிய சிறப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு தேவைப்படும் கருவிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.
Ø தற்போது பொதுப்பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கான போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், உயர்நிலை மேல்நிலை கல்விக்காக சிறப்பு பள்ளிகளுக்கும் மாற்றுத்திறன் மாணாக்கர்கள் அதிக அளவில் வருகின்றனர். எனவே, சிறப்பு பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை தேவைக்கேற்ப கூடுதலாக நியமிக்க வேண்டும்.
Ø பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு பார்வைத்திறன் ஆசிரியர்களையும், செவித்திறன் மாணாக்கர்களுக்கு செவித்திறன் ஆசிரியர்களையும் கூடுதலாக நியமிப்பது பயன்படும்.
இவைகள் எல்லாம் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு சட்டபூர்வ உரிமை என்பதை உணர்ந்து பள்ளிக்கல்வித்துறையும், தமிழக அரசும் செயலாற்ற வேண்டும்.
(பா. ஜான்ஸிராணி) தலைவர்
(எஸ். நம்புராஜன் பொதுச்செயலாளர்
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Be the first to leave a comment