“பார்வையற்றோர் வங்கிக் கணக்கு வைத்திருப்பது சட்டவிரோதம்” வங்கி மேலாளரின் அராஜகப் பேச்சு, போராட்டம் நடத்தப்போவதாக டாராடாக் அறிவிப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
19 ஜூலை, 2020

graphic அஷோக்பாலா என்கிற ஐயப்பன்
அஷோக்பாலா என்கிற ஐயப்பன்
திருவாரூர் மாவட்டம் திருத்தரைப்பூண்டி வட்டம் பாண்டிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக்பாலா என்கிற ஐயப்பன். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தான் கணக்கு வைத்திருக்கும் திருத்தரைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர், தன்னைப் பிற வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகத் திட்டியதோடு, பார்வையற்றவர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பதே சட்டப்படி தவறு” என கண்டபடி பேசியதாக ஒரு வாட்ஸ் ஆப் குரல்ப்பதிவை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, தொடர்புடைய வங்கி மேலாளரின் செயலைக் கண்டித்து, எதிர்வரும் 20.ஜூலை.2020 அன்று அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

graphic அஷோக்பாலா என்கிற ஐயப்பன்
“திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவை சேர்ந்த அஷோக்பாலா என்கிற ஐயப்பன் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் திருத்துறைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ்  வங்கியில் பிரதான் மந்திரி வங்கி கணக்கு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியுள்ளார். அந்தக் கணக்கில் ஏடிஎம் மற்றும் பாஸ்புக் எதுவும் கிடையாது. அதனால் பொது சேமிப்பு கணக்கின் கீழ் மாற்றியுள்ளார். இப்போது கணக்கிற்கான ஏடிஎம் கார்ட் பெறுவதற்காக மேனேஜரிடம் மனு கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட மேனேஜர், 15 நாளில் குறுஞ்செய்தி அதாவது எஸ்எம்எஸ் வரும் என்று கூறியுள்ளார், மேற்படி 20 நாள் ஆகியும் எஸ்எம்எஸ் வராத காரணத்தினால் மேனேஜரை அணுகியுள்ளார். அதற்கு மேனேஜர், “ஒரு பார்வையற்றவருக்கு எதற்கு ஏடிஎம்? நீ அக்கவுண்ட் ஓபன் பண்ண கூடாது, இது சட்டப்படி தவறு, உன்னால் எப்படி கையெழுத்து இடமுடியும்?” என்று மிகவும் தரக்குறைவாக மற்றும் கண்ணியமற்ற முறையில் பேசியுள்ளார். இதற்கு மாற்றுத்திறனாளியான ஐயப்பன், “நான் செய்தது என்ன தேசவிரோத குற்றமா?” என்று கேட்டுள்ளார். இதனால் மிகுந்த கோபம் அடைந்த மேனேஜர் மற்றும் அங்கு இருந்த வங்கி அதிகாரிகளும் “வங்கியை விட்டு வெளியே செல்” என்று மிகவும் தரக்குறைவாக அவரை மரியாதையற்ற முறையில் நடத்தியுள்ளனர்.
இதனால் அம் மாற்றுத்திறனாளி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.
மேனேஜர் மற்றும் அங்குள்ள வங்கி அதிகாரிகளின் அதிகாரப் போக்கு மற்றும் அத்து மீறல்களை கண்டித்து
 20 /7/2020 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *