31 ஜூலை, 2020
|
ஓவியா |
பெருமிதம் என்கிற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாத அந்த வயதில், கை வலிக்க வலிக்க, பிரெயிலில் எனக்கான தேர்வினை நானே எழுதினேன். ஒருபோதும் அது எனக்கு சுமையாகவோ, வலியாகவோ, ஏன் பெருமிதமாகவும்கூட உறைத்ததே இல்லை. ஆனால், சிறப்புப் பள்ளியை விட்டு, சாதாரணப்பள்ளிக்கு இடம் பெயர்ந்து, ஒன்பதாம் வகுப்பின் முதல் இடைத்தேர்வினை நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதும் தருணம் வாய்த்தபோதே என் இழப்பை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் இறுதியாக எழுதிய முதுநிலைப் பட்டயத் தேர்வுவரை, ஏதோ ஆன் செய்து விட்டுவிட்ட ரேடியோவைப்போல் தேர்வறையில் முழங்கியிருக்கிறேன். ஒருமுறைக்கு இரண்டுமுறை சொல்வது, பதிலி எழுத்தரின் ‘ஹூம்’ ஒருமுறை கேட்காவிட்டாலும், தூங்கிவிட்டாரோ என்று ஐயுறுவதுமாய் கழிந்திருக்கின்றன என் தேர்வறை நிமிடங்கள். அப்போதெல்லாம் எனக்குள் எழுகிற ஒரே கேள்வியும் ஆதங்கமும் ‘இதற்கெல்லாம் ஒரு வழியே கிடையாதா?’
‘இருக்கிறது, நான் செய்துவிட்டேன்’ என்று நெஞ்சு நிமிர்த்துகிறதே ஒரு குழந்தை. அண்மையில் வெளியான சிபிஎஸ்சி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், தமிழகத்தின் நெய்வேலியைச் சேர்ந்த ஓவியா என்கிற பார்வைத்திறன் குறையுடைய மாணவி, 500 மதிப்பெண்களுக்கு 447 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். அதுவும் தன் தேர்வை தானே கணினியில் எழுதி இந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறாள். செய்தி கேட்டதும் சிலிர்த்தேன். அடடா! இது என் வாழ்நாள் ஏக்கமாயிற்றே. பத்துபேரை ஒருத்தன் அடிக்க முடியாது என்று தெரிந்தும் ஏன் நாயகனை திரையில் ரசிக்கிறோம்? நிஜத்தில் நம்மால் செய்ய முடியாத ஒன்றை திரையிலாவது பார்த்து திருப்திபட்டுக்கொள்ளத்தானே! அப்படித்தான் என்றால், எனக்கு ஓவியா நட்சத்திரம்தான். ஆனால், நிழல் நட்சத்திரம் அல்ல, நிஜத் தாரகை. “உடனே பேசிவிடு” என்று மனம் அடித்துக்கொண்டு பரபரத்தது. பேசிவிட்டேன். குழந்தைமை மாறாத குரலில் ஓவியாவும், சுமைதான் என்றாலும், பக்தியோடு பள்ளக்கு சுமந்து, அதை இறக்கிவைத்தபின் வருகிற ஒருவித களைப்பும் பெருமிதமும் கலந்த மனோபாவத்தில் ஓவியாவின் அம்மாவும் பேசினார்கள்.
என் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஓவியாவிடமிருந்து புறப்பட்ட விடைகள், நெத்தியடி ரகம். “எப்படியிருந்தது இந்தப் புது அனுபவம்? ஏன்னா ஒன்பதாம் வகுப்புவரைக்கும் நீங்க சொல்ல, இன்னொருத்தர் எழுதிருப்பாங்க” என்று நான் முடிக்கும் முன்னமே, “ஏழாவதுல இருந்து என் பரிட்சைகளையெல்லாம் நான் மடிக்கணினியில்தான் சார் எழுதுறேன்” என்று பதில் வந்தபோது, “பெரிய இவருனு நினைப்பு” என எனக்குள்ளே ஒரு குரல் கேட்கத்தான் செய்தது. “என்ன ஸ்க்ரீன் ரீடர் யூஸ் பண்ணுறீங்க என்விடீஏவா ஜாஸா?” “ரீஜனல் லாங்குவேஜுக்கு என்வீடிஏதான சார் யூஸ் பண்ண முடியும்?” இது அடுத்த பல்பு.
ரெட்டினாய்டு பிக்மண்டோசா (RP) என்கிற விழித்திரை பாதிப்பால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பார்வையை இழந்துகொண்டிருந்த ஓவியாவிற்கு இப்போது முழுப்பார்வையும் இல்லை. பார்வைக்குறையுடையவர்கள் கணினியிலும் தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம் என சிபிஎஸ்சி தேர்வு நெறிமுறைகளில் சொல்லப்பட்ட ஒற்றை வாக்கியத்தைச் சிக்கெனப் பற்றிக்கொண்டனர் ஓவியாவும் அவளின் பெற்றோரும். தான் படிக்கிற பள்ளியும் இதற்கு ஊக்கமளிக்கவே, தனது கோரிக்கையினை ஒரு விண்ணப்பமாகத் தயார்செய்து தேர்வு வாரியத்திற்கு அனுப்பியிருக்கிறாள் ஓவியா. அனுமதியும் கிடைத்துவிட, அந்தச் சாதனையும் அரங்கேறியிருக்கிறது.
“மைக்ரோசாஃப்ட் கீப்பேடுதான் பயன்படுத்தினேன். கேள்வியை ஒரு மேடம் வாசிக்க, பதில்களை நான் மைக்ரோசாஃப்ட் வேர்டில் டைப்செய்தேன். எல்லாம் முடிந்ததும் அதை அப்படியே ப்ரிண்ட் ஔட் கொடுத்துவிட வேண்டியதுதான்”என்றவரிடம், “கணக்குல அதிகமா குறியீடாவே இருக்குமே” எனக்கேட்டால், “சின்னச் சின்ன சிக்கல்கள் இருந்துச்சுதான், ஆனா சமாளிச்சிட்டேன்” என்றார். “எக்சாம் அப்போ எனக்கிருந்த ஒரே தொந்தரவு, எனக்கு மற்றவுங்களைவிட ஒருமணிநேரம் அதாவது எல்லோருக்கும் மூனு மணிநேரமுனா எனக்கு நாலு மணிநேரம், ஒருமணிநேரம் கிரேஸ் டைம் கொடுப்பாங்க இது தேர்வு விதி. அந்த கிரேஸ் டைம்ல மற்ற ஸ்டூடன்ஸெல்லாம் கிளம்புவாங்க. அவுங்கள ஒழுங்குபடுத்தி அனுப்புறதுக்காக, மைக்ல பேசினாங்க, அந்த சத்தம்தான் ரொம்பவே டிஸ்டர்பா இருந்துச்சு” என்றார்.
|
கோகிலா |
ஓவியாவிற்கு ஒரு அண்ணன் பொறியியல் படிக்கிறார். அப்பா என்எல்சியில் பொறியாளர். அம்மா கோகிலாதான் ஓவியாவின் ஆன் சலிவன். “பிறந்தப்போ கண்ணெல்லாம் நல்லாத்தான் சார் இருந்துச்சு. எல்கேஜி போனப்போ, அவ எல்லாத்தையும் கிட்ட வச்சுப் பாக்கிறதா அவுங்க டீச்சர்ஸ் சொன்னாங்க. செக் பண்ணி பார்த்ததில பிரச்சனை இருக்கிறது தெரியவந்துச்சு. ஸ்கூல்ல எல்லோரையும் போல தன்னால படிக்க எழுத முடியாமப் போனதில குழந்தை ரொம்பவே அப்செட் ஆயிட்டா. இப்போ பத்தாம் வகுப்பு எழுதின அதே ஜவஹர் மேல்நிலைப்பள்ளியிலதான் அப்பவும் அவ படிச்சிட்டிருந்தா. அப்புறமா திருச்சில சிவானந்த பாலாலயா பள்ளில நிழலாசிரியர் (shadow teacher) வச்சுக்க அனுமதிச்சாங்க” என்றவரை நிறுத்தினேன். இதைப் படிக்கும்போது உங்களுக்கு எழுகிற அந்தக் கேள்வி எனக்குள்ளும் எழுந்துவிட்டதே இடைமறிக்காமல் இருப்பது எப்படி? அவ பக்கத்தில இருந்து அவளுக்கு வகுப்பில் நடக்கிறதெல்லாம் விளக்குறவுங்களுக்குப் பேருதான் ஷேடோ டீச்சர்” என்றார். அந்த நிழல் ஆசிரியருக்கு ஓவியாவின் பெற்றோரே ஊதியம் வழங்கியிருக்கிறார்கள். இவ்வகையான ஏற்பாட்டை அந்தப் பள்ளி அனுமதித்தது குறித்தும் சிலாகித்தார்.
|
சங்கர் |
தந்தை சென்னைக்கு பணிநிமித்தம் இடமாறுதல் பெற்றபோது, ஓவியா சென்னையிலுள்ள சில்வரன் ஸ்பிரிங்ஸ் என்ற அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தன்னார்வலர் திரு. சங்கர் அவர்களை ஓவியாவின் அம்மா சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புதான், இன்று நாம் ஓவியாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதற்கான ஆரம்பப்புள்ளி. கணினி வழியாகப் படிப்பது குறித்தும், திரைவாசிப்பான்கள் பற்றியும் எடுத்துச் சொன்ன திரு. சங்கர் அவர்கள், கணினியில் பயன்படும் குறுக்குவழி விசைகள் பற்றிய குறிப்புகள் (shortcut keys) அடங்கிய ஒரு புத்தகத்தையும் ஓவியாவின் அம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அத்தோடு, ஒரு தட்டச்சு மையத்திலிருந்து பழைய பயிற்சிப் புத்தகத்தை வாங்கிவந்து, தன் குழந்தைக்கு அப்பாவும் அம்மாவுமே பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். கர்ணவித்யாவைச் சேர்ந்த பேராசிரியர் திரு. ரகுராமன் அவர்களும் அவ்வப்போது வழிகாட்ட, தொடர் பயிற்சியும் முயற்சியும் ஓவியாவை வெற்றிப்பாதைக்குக் கூட்டிவந்திருக்கிறது.
|
ரகுராம் |
அலுவலகம் தவிர்த்த பிற நேரங்களில் முழுக்க முழுக்க ஓவியாவின் படிப்பிற்காக அவரோடு உடனிருக்க வேண்டும் என்பது, கணவர் விஜயராஜுக்கு மனைவி கோகிலா இட்ட அன்புக்கட்டளை. தந்தை பணியிட மாற்றத்தால் என்றால், ஓவியாவின் அம்மா அவளின் படிப்புக்காகவே அவ்வப்போது ஊர் விட்டு ஊர் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார். மகளின் கல்விக்காக வெளியூரில் வீடு பார்த்து தங்க வேண்டிய சூழல். மகனை விடுதியில் விடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், தான் மிகவும் நேசித்த டென்னிஸ் விளையாட்டைக் கூட மகன் கைவிட வேண்டிய நிலை. தன் அம்மாமீது சொல்ல முடியாத கோபம் அவனுக்கு. மகனின் நியாயமான விருப்பமும் மகளின் அவசியமான தேவையும் உரசிக்கொள்கிற அந்தத் தருணத்தில், தாயாய் ஒரு பெண் அடையும் பரிதவிப்பும் வலியும் எந்த மொழியிலும் அடங்காது. “பாப்பா பிறந்ததில இருந்து எவ்வளவோ புறக்கணிப்புகளைச்சந்திச்சுட்டேன். அப்போலாம் சரி கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இந்த பிள்ளையை நமக்குக் கொடுத்திருக்காருன்னு நினைச்சுக்குவேன்” என்று அவர் சொன்னபோது, கடவுள் நம்பிக்கை குறித்த இன்னோரு கோணமும், நலிந்தவர்களின் வாழ்வில் அதற்கான நுட்பமான தேவையும் எனக்கு விளங்கிற்று.
“என்ன மாதிரி ஸ்பெஷல் அம்மாவையெல்லாம் அவ்வளவு சீக்கிரமா இந்த சமூகம் அங்கீகரிக்காது. அவுங்க அங்கீகரிக்கிறப்போ நமக்குள்ள எல்லாமே ஒரு முடிவுக்கு வந்திருக்கும். எல்லா அம்மாக்களுக்கும் என்னை மாதிரி பொருள் வசதி இருக்க வாய்ப்பில்லை. அவுங்க அன்றாடம் பார்க்கிற தொழில விட்டுட்டு, எங்கேயோ ஒரு இடத்தில போய் பிள்ளையைப் படிக்கவைக்கிறதெல்லாம் முடியாத காரியம். அதனால, யாரா இருந்தாலும், அவுங்களுக்கு என்ன குறைபாடுஇருந்தாலும், அவுங்களுக்கும் அந்தப் பள்ளியில இடம் இருக்கணும். அப்படிச் செய்தால், அதுவே இந்தச் சமூகம் என்னை மாதிரி ஸ்பெஷல் அம்மாக்களுக்குக் கொடுக்கிற சிறந்த அங்கீகாரமா நினைக்கிறேன்.” என்று முடித்தார் கோகிலா.
ஓவியாவின் சிறுவயதில் அவளைப் பரிசோதித்த யாரோ ஒரு மருத்துவர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்த்தால், இருக்கும் குறைப்பார்வையும் வேகமாகவே மங்கிவிடும் என்று முட்டாள்த்தனமாய்க் கிளப்பிவிட, மருத்துவர் வாக்கை மறுதளிக்க மனமில்லை பெற்றோருக்கு. இப்போது ஓவியாவை சிறப்புப் பள்ளியில் சேர்க்கலாம் என்ற புரிதல் அவள் அம்மாவுக்கு வந்திருக்கிறது. ஆனால், ஓவியா தயங்குகிறாள். அதனால், ஊரடங்கு முடிந்த கையோடு, அம்மா மகள் இரண்டுபேர் மட்டும் மேல்நிலைக் கல்விக்காக கோவையில் வீடெடுத்துத் தங்கப் போகிறார்கள். இந்தமுறை, அண்ணனின் பூரண சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும்.
ப. சரவணமணிகண்டன்
தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com
எரியும் விளக்கு மேலும் பிரகாசமாக எரிவதற்கு உங்களை போன்றவர்களின் இதுபோன்ற முயற்சி தூண்டுகோலாக அமையும் என நம்புகிறேன்.
ஓவியாவின் இந்த சாதனை பார்வையற்ற சமுதாயத்திற்கு ஒரு புதிய தொடக்கத்தையும் அரசாங்கத்திற்கு ஒரு வழிகாட்டு பாடமாகவும் அமையும். பதிவு மிக அருமை தங்களின் நேர்காணலை யூடியூபிலும் கேட்டேன் வாழ்த்துக்கள் சார்
பார்வையற்றவர்கள் என்றால் தங்களைச் சுற்றி இருப்பதே அவர்களுக்கு தெரியாது அவர்களை போய் படிக்கவைத்து பதவி எல்லாம் கொடுத்து தேவையில்லாத வேலையை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது என்று புலம்புகின்ற பல கையாலாகாத நண்பர்கள் நான் சந்தித்து இருக்கிறேன் அவர்களுக்கு எல்லாம் சாட்டையடி கொடுக்கும் வகையில் ஓவியா அவர்கள் சாதித்திருக்கிறார் இதன் பிறகுதான் பார்வையற்றோர் பார்வை உள்ளவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை சமூகத்திற்கு நிரூபித்துக்காட்ட போகின்றனர் பார்வையற்ற சமூகத்தினர் நாங்கள் செய்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நமது தலைமுறை வருந்தும் வேளையில் நமக்கு பிறகு வரப்போகிறார்கள் மிகப் பெரிய சாதனையை செய்ய தொடங்கிவிட்டனர் என்பதையே இது காட்டுகிறதுநான் படிக்கும்போது படிப்பதற்கு கூட brail புத்தகங்கள் கூட கிடைக்காது அப்படியெல்லாம் துன்பப்பட்டு படித்தோம் இந்த வளர்ச்சி போற்றுதலுக்குரியது இதை தமிழக அரசும் சிறப்பு பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும் என அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் ஆறாம் வகுப்பில் இருந்தே அவர்களுக்கு அந்த பயிற்சியை வழங்க வேண்டும் என்பது என் கருத்து நன்றி