9 ஜூலை, 2020
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92, 93 ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளவிருந்த சட்ட திருத்த நடவடிக்கையினைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது நடுவண் அரசு.
கரோனாவுக்குப் பின்னான காலகட்டத்தில், நாட்டின் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும்பொருட்டு, நடுவண் அரசால் இயற்றப்பட்ட 19 சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது நடுவண் அரசு. அதன்படி, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் உயிர்ப்பாகமான ‘குற்றமும் தண்டனைகளும்’ என்கிற 16ஆம் அத்தியாயத்தின் பிரிவுகளான 89, 92, 93 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராகப் பல்வேறு வகைகளில் இழைக்கப்படும் குற்றங்களுக்கான தண்டனைகளை குறைப்பதோடு, அவற்றின் விசாரணை நடைமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களைப் பரிந்துரைத்தது நடுவண் அரசு.
இது தொடர்பாக திருத்தத்தின் மீதான கருத்துக் கேட்பு என்கிற சம்பிரதாய நடவடிக்கைக்காக ஏழு மாற்றுத்திறனாளி அமைப்புகளுக்கு மட்டும் ஊனமுற்றோருக்கான அதிகாரமளித்தல் துறையால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. மிகக் குறுகிய கால அவகாசத்தை வழங்கும் வகையில், ஜூலை 10ஆம் தேதிக்குள் இந்த திருத்தங்களின் மீதான தங்களின் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அதில் கூறப்பட்டிருந்தது. நடுவண் அரசின் பரிந்துரையைக் கடுமையாக எதிர்த்த NCPED பிற அமைப்புகளின் கருத்துகளைத் திரட்டிடும் நோக்கத்தோடு அந்தக் கடிதத்தை வெளியிட்டது. கடிதம் வெளியானது முதலாகவே, பல மாற்றுத்திறனாளி அமைப்புகள் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான மேடை (NPRD) மிகக் காத்திரமான முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு, ஏழு அமைப்புகளுக்கு மட்டும் கடிதம் அனுப்பிய நடுவண் அரசின் செயலை வன்மையாகக் கண்டித்திருந்தது.
தமிழகத்தில் இது தொடர்பான கருத்து கேட்பு மற்றும் கலந்துரையாடலை கடந்த 6.ஜூலை.2020 அன்று ஜூம் வாயிலாக முன்னெடுத்தது தமிழ்நாடு பார்வையற்றோர் முற்போக்கு சிந்ந்தனையாளர் பேரவை. அத்தோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினையும் ஒன்று திரட்டும் முயற்சியாக, திருத்தங்களுக்கு எதிரான வரைவினைத் தயாரித்தது. இந்த சட்டப் பிரிவு குறித்தும், நடுவண் அரசு மேற்கொள்ள விரும்புகிற திருத்தங்கள் குறித்தும் சட்ட திருத்தம் இல்லை, நீதித் திரிப்பு என்ற தலைப்பில் சவால்முரசு மின்னிதழில், கடந்த 5.ஜூலை.2020 அன்று விரிவான கட்டுரையும் வெளியானது. இந்நிலையில், ஊனமுற்றோர் அதிகாரமளித்தல் துறையினால் நேற்று (ஜூலை 8) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருத்தங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுவண் அரசின் இந்த அறிவிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைத்த முக்கியமான வெற்றியாகும். இதற்காகப் போராடிய பல்வேறு அமைப்புகள், தமிழகத்தில்இது தொடர்பான ஆழமான விவாதங்களை முன்னெடுத்த பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவை, ஜூம் கருத்தரங்கில் மட்டுமின்றி, தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்த தளங்கள் அனைத்திலும் திருத்தம் தொடர்பான புரிதல்களை ஏற்படுத்திய அனைத்திந்திய பார்வையற்றோர் சம்மேளனத்தின் துணைத்தலைவர் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் திரு. சிவக்குமார், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் முனைவர் திரு. முருகானந்தன் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோருக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், சமூகவலைதளங்களில் இந்தத் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வினை ஆற்றிய அத்தனை பேருக்கும்நன்றிகளும் வாழ்த்துகளும்.
வெற்றியைக் கொண்டாடுவோம், விழிப்பினைக் கைவிடாது.
U. சித்ரா உபகாரம்; தலைவர்
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
தகவல்களை உடனுக்குடன் தருகின்ற
சவால் முரசுக்கு வாழ்த்துக்கள்.
தொடரட்டும் இந்த சேவை.
நன்றி
தங்கள் சேவை மேலும் பலருக்கு சென்று சேர வேண்டும்