“கொரோனா பேரிடர் நிவாரண நிதி குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்காவிட்டால்… மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தீவிரமடையும்” தலைவர்கள் எச்சரிக்கை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

graphic போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்

 கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் குடும்பங்களில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்க வலியுறுத்தி கருப்பு சின்னம் அணிந்து அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டங்கள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழன் (மே 7, 2020) அன்று நடைபெற்றன. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அடக்குமுறைகளை மீறி மாநிலம் முழுவதும் சுமார் 400 மையங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் மற்றும் பாலக்கோடு வட்டங்களில் 5 மையங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

 graphic உடுமலைப்பேட்டையில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள்
சென்னை கிண்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் பா ஜான்ஸிராணி , என் . சாந்தி பங்கேற்றனர். டிசம்பர் – 3 இயக்க தலைவர் பேரா . தீபக் கலந்துகொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுரேந்தர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்செயலாளர் எஸ் நம்புராஜன் மாவட்ட செயலாளர் மனோன்மணி பங்கேற்றனர்.
graphic அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான நலச்சங்கத்தின் அறிக்கை

மாற்றுத்திறனாளிகள் எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடியவர் என்பதால் சத்தாண உணவு வழங்கி மாற்றுத்திறனாளிகளை அனைத்து அரசாங்கங்களும் இந்த கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டுமென ஐ . நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரோஸ் சுட்டிக்காட்டியிருப்பதை சுட்டிக்காட்டிப் பேசிய மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர்கள் , நமது நாட்டில் சத்தான உணவு வழங்குவது இருக்கட்டும் , வலிப்பு நோய் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள் , உபகரணங்கள் வாங்கவாவது அரசுகள் உதவ வேண்டாமா என கேள்வி எழுப்பினர்
2லட்சம் கோடிக்கு மேல் ஆண்டுக்கு வரவு செலவு செய்யும் தமிழக அரசு இந்தப் பேரிடர் காலத்தில் 200கோடி ரூபாய் செலவு செய்து மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கக் கூடாதா எனவும் வினவினர் . ஹெல்ப்லைன் மூலம் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளதாக சமூகநலத்துறை அமைச்சரும் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் தம்பட்டம் அடிப்பது உண்மைக்கு மாறானது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். பல மாவட்டங்களில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் வேண்டுகோள் வைப்பதை ஏற்று தற்காலிகமாக இந்தப் போராட்டங்களை ஒத்தி வைக்கிறோம். ஆனால் , மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று நிவாரணம் ரூ. 5000 உடன் வழங்காவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் என எச்சரித்தனர்.

 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *