இதழ்களிலிருந்து: நன்றி ஆனந்தவிகடன், அன்னை என்று பேரெடுத்த அப்பன்!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
graphic ஆதித்யா திவாரி, அவ்னேஷ்
படக்காப்புரிமை ஆனந்தவிகடன்

ஆ. நவயுகன்
இந்த விருதை வாங்கிக்கொடுத்தவன் என் மகன் அவ்னீஷ்தான்’’ என்பவரின் குரலில் தாய்மையின் பெருமிதம்.
பிரீமியம் ஸ்டோரி
உலகின் ஆகச்சிறந்த உணர்வு தாய்மைதான். பிள்ளைகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தாய்மையால் அவர்களை நேசிக்க முடியும். தாய்மை உணர்வுக்கு ஆண், பெண் வித்தியாசமும் கிடையாது.
இதைத் தன் பாசத்தால் நிரூபித்துவருகிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதித்யா திவாரி. சர்வதேச மகளிர் தினத்தன்று பெங்களூரில் ‘wEmpower ‘ என்ற நிகழ்வில் ‘உலகின் மிகச்சிறந்த அம்மா’ என்று பாராட்டு பெற்றிருக்கிறார் ஆதித்யா. இந்த நிகழ்வை நடத்தியது இந்தியாவின் புகழ்பெற்ற பிரிகேட் குரூப் கம்பெனி. தற்போது புனேவில் வசித்து வருகிற ஆதித்யாவைத் தொடர்பு கொண்டோம். அவரிடம் பேசுவதற்கு முன்னால், அவரைப் பற்றிச் சில வரிகள்.
அடிப்படையில் மென்பொறியாளரான ஆதித்யா, சில வருடங்களுக்கு முன்னால் தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு ஆதரவற்ற குழந்தைகளின் இல்லம் ஒன்றுக்கு இனிப்பு வழங்கச் சென்றிருக்கிறார். அப்போது ஒரு கட்டிலின் ஓரத்தில் ஒரு வயதுக் குழந்தையொன்று படுத்திருந்தி ருக்கிறது. அவனைப் பற்றி ஆதித்யா விசாரிக்கையில், ‘அது பைத்தியம். கூடிய சீக்கிரம் இறந்துவிடும்’ என்றிருக்கிறார் கேர் டேக்கர் ஒருவர். அந்தக் குழந்தையின் பெயர் அவ்னீஷ். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை அவன். மனம் கனத்துப்போன ஆதித்யா, அவ்னீஷை அடிக்கடி சென்றுபார்க்க ஆரம்பித்தி ருக்கிறார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த இல்லத்தைச் சேர்ந்தவர்கள், அவ்னீஷை வேறோர் இல்லத்துக்கு மாற்ற, அங்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார் ஆதித்யா.
அப்போதுதான் இதுபோன்ற இல்லங்களில் டாக்குமென்ட்டேஷன் இல்லாமல் இருக்கிற அவ்னீஷ் போன்ற குழந்தைகள் உடல் உறுப்புகளுக்காகக் கடத்தப்படலாம் என்பது ஆதித்யாவுக்குத் தெரிய வந்திருக்கிறது. உடனே காவல்துறையில் புகார் அளித்ததோடு, சட்டப்படி தத்தெடுப்புக்கான முயற்சிகளையும் செய்ய, 2016 ஜனவரியில் அவ்னீஷை முறைப்படி தத்தெடுத்துக்கொண்டார் ஆதித்யா. இனி, ஓவர் டு அவ்னீஷ் அப்பா.
“என் குழந்தை பிறந்த இரண்டாம் நாள் அனாதையாக்கப்பட்டான். இரண்டு வருடங்கள் அவன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தான்.
அவனுக்குத் தைராய்டு இருந்தது, இதயத்தில் இரண்டு ஓட்டைகளும் இருந்தன, கால் முட்டியில் இருக்கும் பிரச்னையால் அவனால் நிற்க முடியாது என்று கூறினார்கள் மருத்துவர்கள். இவற்றைத் தவிர, ஐ.க்யூ குறைவு, அட்ரினலின் சுரப்பியில் பிரச்னை, தூக்கக் குறைபாடு, ஆணுறுப்பில் சிக்கல் என்று எக்கச்சக்கப் பிரச்னைகள்… அவனுக்கான மருத்துவ உதவிகள் செய்யச் செய்ய, அவனுக்கு இதயத்தில் இருந்த இரண்டு ஓட்டைகளும் அறுவை சிகிச்சை செய்யாமலே மறைந்தன. நான் உங்களிடம் அவனுடைய குறைபாடுகளைச் சொல்லவில்லையென்றால் அவனை சாதாரணக் குழந்தை என்றே நீங்கள் நினைப்பீர்கள். அந்த அளவுக்கு அவன் மற்ற நார்மல் குழந்தை களைப்போல மகிழ்ச்சியாகவே இருக்கிறான். என்னுடைய குழந்தை வளர்ப்புப்பற்றி, என் முகப்புத்தகத்தில் எழுதுவது வழக்கம். அதைப்பார்த்து விட்டுத்தான், `உலகின் மிகச்சிறந்த அம்மா’ என்ற விருதை எனக்குக் கொடுத்தார்கள். இந்த விருதை வாங்கிக்கொடுத்தவன் என் மகன் அவ்னீஷ்தான்’’ என்பவரின் குரலில் தாய்மையின் பெருமிதம்.
‘`அவ்னீஷைத் தத்தெடுத்த பின் பலரும் என்னிடம் சிறப்புக் குழந்தை வளர்ப்புப்பற்றிக் கேள்வி கள் கேட்கத் தொடங்கினர். அப்போதுதான் சிறப்புக் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை முழுமூச்சாக ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து, வேலையை விட்டுவிட்டு களத்தில் இறங்கினேன். சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேச ஆரம்பித்தேன். அவர்கள் குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்னை களை எடுத்துரைக்க ஆரம்பித்தேன். சிறப்புக் குழந்தைகளில் சிலருக்குக் காதுகேட்கும் திறன் குறைவாக இருக்கும், சிலருக்கு ஐக்யூ லெவல் குறைவாக இருக்கும். சில குழந்தைகளால் பால் குடிக்க முடியாது, ஏனென்றால் அவர்களால் ஜீரணிக்க முடியாது. என் மகனுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. தவிர, டவுன் சிண்ட்ரோம் இருக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சிகிச்சைக்காக ஒரே மருந்தைக் கொடுக்க முடியாது. இது பல சிறப்புப் பெற்றோர்களுக்கும் தெரியாத ஒரு விஷயம். இவற்றையெல்லாம் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தெளிவாகச் சொல்லித்தந்து வருகிறேன்” என்றவர் தொடர்ந்தார்.
“சிறப்புக் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாத பெற்றோர்களுக்கு கவுன்சலிங் தருவது, சிறப்புக் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு உதவி செய்வது, 7 முதல் 14 வயதில் இருக்கிற சிறப்புக் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லித்தருவது, பாலியல் ஆசை வந்த டீன் ஏஜ் குழந்தைகளுக்கு யோகா, தியானம் கற்றுத் தர உதவுவது என்று தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறேன். என் அவ்னீஷைப் போன்ற குழந்தைகள் தங்கள் பலவீனங்களுடன் உலகத்தில் சுயமாக வாழ்கிற அளவுக்கு உருவாக வேண்டும். கூடவே, சிறப்புக் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் போராடிவருகிறேன்” என்கிற ஆதித்யா, இதற்காக, இந்தியாவில் 22 மாநிலங்கள் உட்பட உலகின் பல நாடுகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், சந்திப்புகள், ஆன்லைன் கான்ஃபரன்ஸ்கள் என்று சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறார். சிறப்புக் குழந்தைகள் வளர்ப்புப் பற்றிய விழிப்புணர்வுக் கலந்துரையாடலுக்காக ஐ.நா சபை ஆதித்யாவை அழைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தான் தொடங்கிய ஆன்லைன் பெட்டிஷன் மூலம், அறிவுவளர்ச்சி சவால் உள்ள குழந்தைகளுக்கு அரசு இயலாமைச் சான்றிதழ் வழங்கக்கோரி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஆதித்யா. அதன் பெயர் தனிப்பட்ட இயலாமை அடையாள அட்டை. (Unique disability identification (UDID).
மகன் அவ்னீஷ் பற்றிப் பேசுகையில், “என் மகன் என்னைச் சில நேரங்களில் அம்மா என்பான், சில நேரங்களில் அப்பா என்பான். அவன் ஆடுவான், பாடுவான், செல்லப் பிராணிகளுடனும் இயற்கை யோடும் விளையாடுவான். இவற்றையெல்லாம் செய்யும் போது அவன் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் எல்லா மாணவர்களையும்போல ரெகுலர் பள்ளிக்கூடத்துக்குத் தான் சென்றுகொண்டிருக்கிறான். விடுமுறை நாள்களில் என்னுடன் ஆலோசனைக்கூட்டங்களுக்கு வருவான். அவன்தான் என் வாழ்க்கையின் அர்த்தம்” என்கிற இந்தத் தாயுமானவனுக்கு நாமும் வாழ்த்துகளைச் சொன்னோம்.
ஆனந்த யாழை மீட்டட்டும்.
காப்புரிமை: ஆனந்தவிகடன்
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *