தலையங்கம்: பொதுத்தேர்வு என்கிற பொம்மலாட்டம்:

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
graphic பிரெயில் எழுதும் மாணவர்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகளைப் பொருத்தவரை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடங்கள் சிறப்புக் குழந்தைகளுக்கான பிரெயில், சைகைமொழி உள்ளிட்ட பிரத்யேக முறைகளோடு பொருத்திக் கற்பிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைக்கல்வியில், வழக்கமான பாடங்களில் பெறும் முன்னேற்றம் மட்டுமின்றி, அந்தப் பிரத்யேக முறைகளில் குழந்தைகள் பெறும் அடைவுகளைச் சோதிப்பது, அவற்றை குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கற்பிப்பது போன்றவை இன்றியமையாத கற்பித்தல் செயல்பாடுகளாகும். இத்தகைய பிரத்யேக முறைகளின் மூலம், அவர்களுக்குள் சிறப்பான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதே சிறப்புக் குழந்தைகளுக்கான தொடக்க மற்றும் இடைநிலைக்கல்விவரை கவனம் செலுத்தவேண்டிய இன்றியமையாத அம்சமாகும்.

பள்ளிக்கல்வித்துறையின் சமச்சீர் கல்வி பாடங்களை எவ்வாறு பார்வைத்திறன், செவித்திறன் மற்றும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு அவர்கள் ஏற்கும் வகையில், மாற்றிக் கற்பிப்பது, பொதுப்பாடங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை இத்தகைய குழந்தைகள் அணுகும் (easy to access) வகையில் அவற்றை எவ்வாறு வடிவமைப்பது போன்ற ஆக்கபூர்வமான எந்த ஒரு திட்டமிடலோ, நடவடிக்கையோ அதற்கான முனைப்போ அரசிடம் இல்லை. பள்ளிக்கல்வித்துறை விதிகளே சிறப்புப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்ற அரசாணைக்கிணங்க, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி தொடர்பான நடவடிக்கைகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் இடையே இருக்க வேண்டிய ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் களத்தில் அறவே காணப்படவில்லை. பொதுத்தேவு அறிவிக்கப்பட்ட ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பிரெயில் புத்தகங்கள் சிறப்புப் பள்ளிகளில் இதுவரை வழங்கப்படவில்லை என்பதே இதற்குச் சரியானசான்றாகும்.

graphic பதிலி எழுத்தர் உதவியுடன் தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள்
 சிறப்புப் பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் நடத்தப்படும் பருவத்தேர்வு, திருப்புதல் தேர்வு என அனைத்தும் பதிலி எழுத்தர்களைக் (scribes) கொண்டே நடத்தப்படுகின்றன. ஆனால், பொதுத்தேர்வு என்ற பெயரில் இந்த பதிலி எழுத்தர் நடைமுறையைக் கற்றலில் சிறப்புத் தேவையைக் கோருகிற ஐந்தாம் வகுப்பு குழந்தைக்கு அறிமுகம் செய்வது, முற்றிலும் பொருத்தமற்ற அதன் குழந்தைமைக்கு எதிரான செயல். பதிலி எழுத்தரைத் தொடர்புகொள்ளல், அவரோடு உரையாடித் தனது தேர்வினை எதிர்கொள்ளுதல் போன்றவை,இத்தகைய குழந்தைகளுக்குக் கூடுதல் மன அழுத்தங்களையே உண்டாக்கும். மேலும், பதிலி எழுத்தர்களாக நியமிக்கப்படுபவர்கள், இத்தகைய குழந்தைகளைக் கையாள்வதில் எத்தகைய பயிற்சியும் அனுபவமும் பெற்றவர்கள் என்பதைமதிப்பிடுவதற்கு அரசிடமும் எந்தவிதத் திட்டமும் இல்லை.
கண்டுகொள்ளப்படாத இத்தனை குறைபாடுகளுக்கு இடையே, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் நடப்புக் கல்வியாண்டுமுதல் 5 & 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறை ஆயத்தப்பணிகள் சிறப்புப் பள்ளிகளிலும் நடந்துவருகின்றன. இதற்கான தங்களின் ஆட்சேபங்களை அரசுக்கு முறையாகத் தெரிவிக்கும் பொறுப்பும் கடமையும் கொண்ட சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களில் பெரும்பாலோர், சாவி கொடுத்தால் சுற்றும் பொம்மைகள் போல, பொதுத்தேர்வுச் சுமையைச் சிறப்புக் குழந்தைகளின் மேல் ஏற்றத் தொடங்கிவிட்டார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வியில் நாம் தொடங்கிய இடத்திலேயே தேங்கி நிற்கிறோம் என்பதைக்கூட உணராமல், அரசின் தும்மலையும் மொழிபெயர்ப்பதே ஆசிரியர்களின் தொழில்தர்மமாகிவிட்ட கொடுமையை எங்குபோய்ச் சொல்வது? மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை நலன் மற்றும் உரிமைகளைப் பேணப் போராடுகிற சங்கங்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளிடமும்கூட எந்தவித எதிர்ப்புக் குரலற்ற பலத்த மௌனம் நிலவுகிறது.
இத்தகைய பொதுத்தேர்வுகளை நிராகரிப்பதன் வாயிலாக, பொது சமூகத்தோடான மாற்றுத்திறனாளிகளின் சம பங்கேற்பு குறித்து எழுப்பப்படும் அச்சம் கலந்த வினாக்களுக்கு விடை ஒன்றுதான், சம வாய்ப்பைத் தந்துவிட்டு, சம பங்கேற்பைக் கோருங்கள். அதுவரை வேண்டாம், ஐந்தாம் வகுப்புக்கெல்லாம் பொதுத்தேர்வு என்கிற பொம்மலாட்டம்.

 

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *