குருபிரசாத்
குரலற்றவர்களின் குரல்…
தி.விஜய்
கோவை, சாடிவயல் பகுதியில் உள்ள கோவைக் குற்றாலத்தில் (Eco Tourism) அறிவிப்பாளராகப் பணிபுரிந்துவருகிறார் அய்யாச்சாமி என்ற பழங்குடி இளைஞர்.
அய்யாச்சாமி
“சுற்றுலாப் பயணிகளின் கனிவான கவனத்துக்கு… இடது பக்கம் யாரும் போகக்கூடாது. அது வனப்பகுதி. சோப்பு, ஷாம்பு எல்லாம் பயன்படுத்தக் கூடாது. உங்க பொருள்களை எல்லாம் பத்திரமா வெச்சுக்கோங்க” ஆர்ப்பரித்துக் கொட்டும் சிறுவாணி நீர்வீழ்ச்சிக்கு மத்தியிலும் கணீரென்று ஒலிக்கிறது அய்யாச்சாமியின் குரல்.
கோவை, சாடிவயல் பகுதியில் உள்ள கோவைக் குற்றாலத்தில் (Eco Tourism) அறிவிப்பாளராகப் பணிபுரிந்துவருகிறார் அய்யாச்சாமி என்ற பழங்குடி இளைஞர். பரந்து விரிந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம்… பாய்ந்து வரும் சிறுவாணி நீர்… வனவிலங்குகள்… இவற்றுக்கு மத்தியில் பணிபுரியும் அய்யாச்சாமியின் இடது கண், முழுவதும் பார்வைத்திறனற்றது. வலது கண்ணிலோ 50 சதவிகிதம் மட்டுமே பார்வை தெரியும். அந்த 50 சதவிகிதப் பார்வையை வைத்துக்கொண்டுதான், சாடிவயல் வனப்பகுதி முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார் இந்த வனமகன்.
“சாடிவயல்தான் எனக்குச் சொந்த ஊர். என் அப்பா, ஒரு காலேஜ் கேன்டீன்ல வேலை செய்யறார். அம்மா வீட்ல இருக்காங்க. ஒரு அக்கா, ரெண்டு தம்பிங்க. அக்காவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு தம்பி காதல் கல்யாணம் பண்ணிட்டு, தனியா இருக்கான். இன்னொரு தம்பி கிடைக்கற வேலைக்குப் போயிட்டிருக்கான். பார்வைக்குறைபாடால 9-ம் வகுப்பு வரைதான் படிக்க முடிஞ்சது. படிச்சு முடிச்சுக் கொஞ்ச நாள் சும்மாதான் இருந்தேன். ஒரு வனத்துறை அதிகாரி, கோவைக் குற்றாலத்துல வேலை வாங்கிக் கொடுத்தாரு. ஆறு வருஷம் ஆச்சு. முன்னாடி, டிக்கெட் செக்கிங், ரோந்துப் பணி, வனப்பகுதில தம், சரக்கு அடிக்கறவங்களை, தனியா இருக்கற காதலர்களை விரட்டுறது’ன்னு சுத்திட்டிருந்தேன். யானை வருவதை 3 கி.மீ-க்கு முன்னாடியே அதோட வாசனையை வெச்சுக் கண்டுபிடிச்சு அலர்ட் பண்ணிடுவேன்.
இங்க டூரிஸ்ட்டுங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கறதனால, அறிவிப்பாளர் வேணும்னு கேட்டுட்டிருந்தாங்க. நான் படிக்கறப்ப பேச்சுப் போட்டில எல்லாம் கலந்துப்பேன். சின்ன வயசுல இருந்தே சத்தமாவும் தெளிவாவும் பேசுவேன். அதனால இந்த வேலை எனக்கு நல்லா செட் ஆகிடுச்சு” என்றவர், சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“இங்க வர சுற்றுலாப் பயணிகள் சிலரே, என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. அதையெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். ‘நீ கடவுள் கொடுத்த வரம்’னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அதனால நானும் இப்படி இருக்கோமேன்னு நினைச்சு, வாழ்க்கைல எப்பவும் கவலைப்பட்டது இல்ல. சின்ன வயசுல போலீஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அது நடக்கலை. ஒரு முறையாவது கப்பல்ல போகணும்னு ஆசை இருக்கு. அது நிறைவேறிடும்னு மனசுக்குள்ள ஒரு ஓரமா நம்பிக்கையும் இருக்கு! வேற எது மேலயும் ஆசை இல்ல. என் வாழ்க்கைல முதல்முறையா ஒரு பொண்ணு வந்தா. நல்லாப் பேசினோம். ரெண்டு பேருக்கும் ரொம்பப் புடிச்சுது. கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.
இப்படி ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டோமேன்னு அவ வருத்தப்படாம, அடுத்தவங்க ஆச்சர்யப்படற மாதிரி வாழணும்னு நினைச்சேன். ஆனா மூணு மாசத்துலயே, ‘இப்படி ஒருத்தன்கூட வாழ முடியாது’ன்னு சொல்லி என் மனைவி என்னைப் பிரிஞ்சு போயிட்டா. அதுதான் ரொம்ப வலிச்சுது” என்று சொல்லும்போது அய்யாச்சாமியின் கணீர்க் குரல் உடைந்துபோனது. பிரிவு, உடைக்காத மனங்கள் இல்லையே!
“நான் இப்ப சந்தோசமா இருக்கேன் அப்படின்னா, அதுக்கு என் வேலைதான் முக்கிய காரணம். இந்த மலையும் காடும்தான் எனக்கு எல்லாமே. எவ்வளவோ சங்கடங்கள் இருந்தாலும், இங்க வர சுற்றுலாப் பயணிகள் சிலர், `இந்த நிலைமைலேயும் உழைச்சுச் சம்பாதிக்கணும்னு நினைக்கறே. உன் அறிவிப்பு மூலம் எங்களைப் பாதுகாக்கற. நீ கடவுள் மாதிரி தம்பி’னு பாராட்டுவாங்க. அப்ப ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்க. அதுக்கு எதுவுமே ஈடாகாது.
ஆரம்பத்துல, பார்வைக்காக சிகிச்சை எடுத்தேன். அப்பறம், இப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன். இப்பவும் எனக்குப் பார்வை வரணும்னு ஆசை இல்ல. எந்தச் சூழ்நிலைலேயும் என்னைக் கைவிடாம இருக்கறது அப்பா, அம்மா மட்டும்தான். அவங்களை எப்பவும் கைவிடாம நல்லாப் பார்த்துக்கணும். நாலு பேருக்கு உதவி பண்ணணும். ஏன்னா, நம்மளவிட கஷ்டப்படறவங்கள நாமதானே சார் பார்த்துக்கணும்.
மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கற உதவித் தொகைக்கு, யார்கிட்ட கேட்கணும்னு தெரியல. அதுமட்டும் எப்படியாவது கிடைச்சுட்டா போதும். வாழ்க்கைய இன்னும் சந்தோசமா வாழ்ந்துடுவேன்” என்றார் நம்பிக்கையுடன்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் குளிர்காற்று தழுவும்போது, சிலிர்த்துச் சிரிக்கிறார் அய்யாச்சாமி. அந்தச் சிரிப்பில், நுரைத்துக் கொட்டும் அருவி மேலும் அழகாகிறது.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Be the first to leave a comment