பார்வை மாற்றுத்திறனாளிகளும் சம வாய்ப்புகளைப் பெற்று, தேர்தலில் வாக்களிக்கும் வகையில், பல்வேறு ஆக்கபூர்வ முன்னெடுப்புகளைத் தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. அவற்றுள் ஒரு நடவடிக்கையாக, இந்தத் தேர்தலில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெயிலில் வாக்குச்சாவடிச் சீட்டு (Booth Slip) வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கையை ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகள் வரவேற்றிருந்தன. இதனை ‘தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: துணைச்செயலர் – ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்’ என்ற செய்தியாக வெளியிட்டோம். இந்நிலையில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெயில் வடிவிலான வாக்குச் சாவடி சீட்டுகளை (booth slips) வழங்கும் நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பார்வை மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு அவரவருக்கான பிரெயில் வாக்குச்சாவடி சீட்டுகளை சரியாக வினியோகிக்கும் நோக்கோடு, அந்த சீட்டுகளில் வாக்காளரின் வாக்குச்சீட்டு எண்ணை மட்டும் சாதாரண எழுத்துகளில் எழுதுகிற பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணியில் அவர்களுக்கு உதவும் வகையில், பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் மூவரும் இதில் பங்கேற்றனர்.
அந்த ஆசிரியர்களில் ஒருவரும், ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவருமான செல்வி U. சித்ரா அவர்கள் நம்மிடம் கூறியது, “தேர்தல் ஆணையத்தின் பிரெயில் வடிவிலான பூத் ஸ்லிப் வழங்கும் நடவடிக்கை வரவேற்புக்குரியது.
தொகுதி விவரம், வாக்காளரின் விவரம் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி தொடர்பான தகவல்கள் என அனைத்தையும் முதன்முறையாகப் பிரெயிலில் தடவிப்பார்த்தது பெருமிதமும் பூரிப்புமாக இருந்தது. அனைத்து விவரங்களும் பிரெயிலில் இருப்பதால், சாதாரண பூத் ஸ்லிப் போல் அல்லாமல், இது சற்று அளவில் பெரியதாக இருக்கிறது” என்றார்.
பிரெயிலில் வாக்காளர் அடையாள அட்டை, பிரெயில் பூத் ஸ்லிப், பிரெயிலில் வேட்பாளர் பட்டியல், பிரெயில் புள்ளிகள் பொறிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என பார்வை மாற்றுத்திறனாளிகளின் சம பங்கேற்பை உறுதிசெய்யும் பல்வேறு நடவடிக்கைகளைத் தெர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. அதேசமயம், பார்வை மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய வாக்குரிமையைக் கட்டாயம் செலுத்திட முன்வரவேண்டும். பார்வை மாற்றுத்திறனாளிகள் நூறு விழுக்காடு தேர்தலில் பங்கேற்பு என்ற செய்தியே, பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் முன்னெடுக்கும் அத்தனை ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கும் நாம் வழங்குகிற அங்கீகாரமாகவும் ஊக்கமாகவும் அமையும்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Be the first to leave a comment