பிரெயில் தின வாழ்த்துகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
லூயி பிரெயில் அவர்களின் புகைப்படம்

உலக பிரெயில் நாள்

ஐக்கிய நாடுகள் பொது அவை – 2019 ஜனவரி 04 லூயி பிறந்த தினம் உலக பிரெயில் நாளாகக் கடைபிடிக்கப்படும் என கடந்த டிசம்பர் 17, 2018 அன்று நடந்த கூட்டத்தில் அறிவித்தது. இதை வரவேற்றுள்ள உலகப் பார்வையற்றோர் ஒன்றியம் (World Blind Union) இதன்மூலம் தங்களது நீண்டநாள் கோரிக்கை ஐக்கிய நாடுகள் அவையால் ஏற்கப்பட்டுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த அறிவிப்பால் பிரெயில் முறையை வளர்த்தெடுப்பதில் உலகநாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படும் என தெரிவித்துள்ளது. சரி, யார் அந்த லூயி? என்ன அந்த பிரெயில்?
 2003ல் நான் மும்பையிலுள்ள பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தில் (NAB) சுருக்கெழுத்து பயின்றுகொண்டிருந்தேன். எனது மாலைநேரப் பொழுதுபோக்காக நானும் சில நண்பர்களும் அவ்வப்போது வொர்லி பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். அங்குதான் என்.ஏ.பி.யின் தலைமை அலுவலகமும் அமைந்திருக்கிறது. பார்வையற்றோர் எளிதாக நுழையும் வண்ணம் அதன் வாயிலின் இரு மருங்கிலும் ஒலிக்கும் பீப் சத்தத்தைக் கடந்து உள்ளே சென்றால், கம்பீரமான ஒரு சிலை நம்மை வரவேற்கிறது. எனக்கு அந்தச் சிலையைத் தடவிக்காட்டிய எனது மராத்திய நண்பன் தத்தா, “இதோ பார் நமது குலசாமி என்றான். பத்தி பத்தியாய்ப் படித்தபோதெல்லாம் நான் உணராத லூயியின் மகத்துவத்தை நண்பனின் ஒரு வார்த்தை போகிறபோக்கில் உணர்த்தியது.
லூயி, பள்ளத்தில் மேடுகளை உருவாக்கி பார்வையற்றோரைக் கல்விமூலம் இச்சமுகத்தோடு சமப்படுத்திய ஓர் சமூகப்போராளி. விரல்களில் கண்களைப் பொருத்திய விந்தையான பார்வையற்ற கண் மருத்துவர். யாதும் ஊரேஎன நமது பாட்டன் கணியன் சொன்னான். உலகின் எல்லா மொழிகளும் பார்வையற்றோர் நம் வசமே என அகில மொழிகள் அனைத்தையும் அறுபத்து மூன்றே வடிவங்களில் அணைத்துக்கொண்ட அன்பாளன், உலகின் தலைசிறந்த ஒருமைப்பாட்டாளன் லூயி.
உலகிலேயே பார்வையற்றோருக்கான முதல் பள்ளியைத் தோற்றுவித்தவர் ஃப்ரான்ஸ்நாட்டைச் சேர்ந்த  வாலண்டைன் ஹாய். இவர், பார்வைப் புலத்தால் பெற இயலாதுபோன அறிவைச் செவிப்புலம் கொண்டு ஈடுகட்ட முயன்றார். பார்வையற்றவர்களுக்கு பைபிள், நாட்டு வரலாறு போன்றவற்றை மனப்பாடம் செய்வித்தார் ஹாய். உள்ளீடுகளை மட்டும் உண்டு செரிக்கத் திணறிக்கொண்டிருந்த பார்வையற்றவர்களின் வாழ்வில் புதிய தெளிவினை ஏற்படுத்தியவர் ஹாயின் பள்ளியில் பயின்ற லூயி பிரெயில் (பிறப்பு-04.ஜனவரி.1809 மறைவு 06.ஜனவரி.1852.)
குதிரைச்சேணம் செய்யும் தொழிலாளியின் மகனான லூயி, மூன்றாவது வயதில் சேணம் தைக்கும் ஊசியால் தனது ஒரு கண்ணைக் குத்திக்கொண்டார். சிகிச்சை பலனளிக்கவில்லை. ஆனால் பாதிப்பு அடுத்த கண்ணுக்கும் பரவியது. இருள்சூழ் உலகே அவர் இறுதிவரை என்றானது.
தனது 10ஆவது வயதில் ஹாய் நடத்திய சிறப்புப் பள்ளியில் சேர்ந்தார் லூயி. அங்கு ஒருமுறை வந்திருந்த இராணுவ கேப்டன் சார்லஸ் பார்பியரின் அறிமுகத்தைப் பெற்று, பார்பியர் பயன்படுத்திய நைட் ரைட்டிங் (night writing) என்ற எழுத்துமுறயைத் தடவிப்பார்த்தார். பார்பியரின் இந்த எழுத்துமுறையானது, வீரர்களிடையே இராணுவத் தகவல்களை இருளிலும்கூடப் பரிமாறிக்கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
விரல்களுக்கு மிக அகலமாகத் தென்பட்ட 12 புள்ளிகள்கொண்ட எழுத்துமுறையை ஆறு எனச் சுருக்கி, பார்வையற்றோருக்கான நித்தியமான மொழியை 63 வடிவங்களில் உருவாக்கினார் லூயி. ஆனால், அவருடைய எழுத்துமுறையை அவர் வாழும் காலத்தில் யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஃப்ரான்சிற்குப் பிறகு 1916ல் அமெரிக்கா முழுமைக்கும் லூயியின் பிரெயில் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று உலகப் பார்வையற்றவர்களின் ஒரே தாய்மொழி பிரெயில்.
இந்தியாவில் என்ன நடக்கிறது?
பிரெயில் தினம் குறித்த செய்தியை பிரெயில் வடிவில் வாசிக்கும் மாணவி நதியா
ஜனவரி 4, 2009 லூயி பிரெயிலின் இருநூறாவது ஆண்டு. அதை நினைவுகூரும் வண்ணம், இந்திய அரசு லூயியின் நினைவாக நாணயம் வெளியிட்டு அவரைக் கௌரவித்தது. வாக்குச் சாவடிகளில் பார்வையற்றோர் தற்சார்புடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், கடந்த 2009 பொதுத்தேர்தல் முதல், வேட்பாளர் பட்டியல் பிரெயில் முறையில் வழங்கப்படுவதோடு, மின்னணு இயந்திரங்களிலும் பிரெயில் எண்கள் பொறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.
தற்போது புதிதாகக் கட்டப்படும் அரசுக் கட்டடங்களில் வைக்கப்படும் பெயர்ப்பலகைகளில், மின்தூக்கிகளின் பக்கவாட்டில் என எல்லா இடங்களிலும் பிரெயிலும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்திய அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள ஊனமுற்றோருக்கான சட்டம் 2016. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்பம் பார்வையற்றோரிடையே பிரெயில் பயன்பாட்டை மெல்லக் குறைத்து வருகிறது.
பள்ளிப் பாடப்புத்தகங்களின் அச்சு வடிவத்தை அறிய இயலாத பார்வையற்றோருக்கு மாற்றாக, பிரெயில் புத்தகங்கள் அச்சடித்து வழங்கப்படுகின்றன. தற்போது கூடுதலாகப் பார்வையற்றோரின் கற்றல் நடவடிக்கைகளில் இடம்பெறும் ஒலிப்புத்தகங்கள் (Audiobooks) மற்றும் கணினி திரைவாசிப்பான்கள் மூலம் (Screen-readers) கேட்டுப் படித்தலால் பார்வையற்றோர் எழுத்து என்கிற சிந்தனையிலிலிருந்து விலகத் தொடங்கிவிட்டனர். பிரெயில் முறையைக் குழந்தைப் பருவத்திலேயே பார்வையற்றோருக்கு அறிமுகம் செய்து கற்பிக்கும் பணியை பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள் வெற்றிகரமாகச் செய்து வருகின்றன. ஆனால், தற்போது இந்திய அரசால் அமல்ப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உள்ளடங்கிய அல்லது ஒருங்கிணைந்த கல்வி (Inclusive Education) திட்டத்தால், பார்வையற்றோருக்கான சிறப்புக் கல்வியின் முக்கியத்துவம் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. விளைவு, முதுகலை படித்த ஆனால், எழுதப் படிக்கத் தெரியாத (Illiterate) புதிய தலைமுறை பார்வையற்றோர் அதிகம் உருவாக்கப்படுகிறார்கள். இது பொதுச்சமூக நீரோட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ளப் போராடும் பார்வையற்றோர் என்கிற விளிம்புநிலைச் சமூகத்திற்கு அரசால் இழைக்கப்படும் அநீதி.
பார்வையற்றோர் என்ன செய்ய வேண்டும்?
மழைக்காலத்தில் வெளிவரும் புற்றீசல்கள்போல, மறுவாழ்வு என்ற போர்வையில் முளைத்திருக்கும் சில பார்வையற்றோருக்கான தொண்டு நிறுவனங்கள்,
அதன் அமைப்பாளர் இயல்பிலும், எண்ணத்திலும் குறைபார்வை (low-vision) உடையவராக இருப்பதால், பிரெயிலின் இடத்தைத் தொழில்நுட்பம் நிரப்பிவிட்டதாகக் கூறி, பிரெயிலின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுக்  கூச்சலிடலாம். அனைவருக்கும் கல்வித்திட்டம்என்ற மாற்றுத்திறனாளிகளின் அதிலும் குறிப்பாகப் பார்வையற்றவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசால் ஊதப்பட்டிருக்கும் சாவுச்சங்கு அக்கருத்தை ஆராதிக்கலாம். அத்தகைய இக்கட்டான காலங்களில், பிரெயிலைக் காப்பாற்ற பார்வையற்றோராகிய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள்ளோம்.
முதலில், ஜனவரி 4 இந்த நாளை பிரெயில் நாளாகஅறிவித்ததை வரவேற்கும் அதேநேரத்தில், பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாளாக உலக நாடுகள் அறிவித்திட பார்வையற்றோராகிய நாம் வலியுறுத்திட வேண்டும். அனைவருக்கும் கல்வித் திட்டத்தால் பார்வையற்றோரின் கல்வியில் ஏற்படும் சிக்கல்கள் குறித்துப் பொதுத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். பார்வையற்ற குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் அவர்களின் நடுநிலைக் கல்வி வரையிலாவது, சிறப்புக் கல்வி அளிக்கப்படுவதை உறுதி செய்ய அரசை வலியுறுத்திட வேண்டும்.
படைப்புச் சமூகத்தின் அங்கங்களான எழுத்தாளன், பதிப்பாளன், அச்சு ஊடகம் என அனைவரும் தனது படைப்புகளின் பிரதிகளை பிரெயிலிளும் அச்சிட ஆர்வம் கொள்ளவேண்டும். அத்தகைய விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்துவதும், படைப்புச் சமுகத்தின் அத்தகைய முயற்சியை ஊக்குவிக்கும் பொருளாதாரப் பாளமாய்த் திகழ அரசை வலியுறுத்துவதும் படித்த நம் ஒவ்வொரு பார்வையற்றவரின் கடமை.
இன்று நம்மில் பல பார்வையற்றவர்கள் அரசு வேலை என்ற நல்ல நிலையில் அமர்ந்திருக்கக் காரணம் பிரெயில் என்பதுதானே உண்மை. அரசு வேலையிலுள்ள பார்வையற்றவர்கள் அனைவரும் மாவட்ட வாரியாக இணைந்து, மாவட்டந்தோறும் பிரெயில் நூலகங்களைக் கட்டமைக்கலாமே! அரசு வேலைக் கிடைத்ததும் திருமணம், சொந்தவீடு என்றெல்லாம் விரியும் நம் இலக்குகளில், அந்த வீட்டிற்காகும் செங்கற்களில் ஒன்றையாவது இத்தகைய நூலகம் அமைக்கப் பங்களிக்கலாமே. நாம் தாமாக முன்வந்து இணையும்போது அரசைத் தீவிரமாக வலியுறுத்தும் தார்மீக உரிமையைப் பெறலாம்.
அரசும் கருப்புக் கண்ணாடிகளையும், வெண்கோல்களையும் வழங்குவதோடு தம் கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காணப்படும் பல்வேறு நூல்களை பிரெயில் வடிவில் மாற்றி, நாம் வாசிக்க உதவும் பிரெயில் டிஸ்ப்லேக்களை இலவசமாகவோ மானிய விலையிலோ வழங்க முன்வரவேண்டும்.  இத்தகைய கோரிக்கைகளோடு அரசை அணுகும் கடமை நம் பார்வையற்ற சமூகத்துக்கு இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளின் துவக்க நாளாய் அமையட்டும் இந்த வருட பிரெயில் நாள்.
ப. சரவணமணிகண்டன்.

தொடர்புக்கு vaazhgavalluvam@gmail.com
முந்தையது
*
 அடுத்தது

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *